மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்

சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த ஒரு உத்தம மனிதரை தமிழர் தேசம் இழந்துவிட்டது. தமிழீழ மண்ணினதும் தமிழீழ மக்களினதும் விடிவிற்காக ஓயாது உழைத்த உயர்ந்த மனிதர் ஓய்ந்துவிட்டார். இது தமிழீழ விடுதலை வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் துயர நிகழ்வு.

கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர் அசாத்தியமான குணவியல்புகளை கொண்டவர். இனிமையான பேச்சும்,எளிமையான பண்பும்,பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் சிறப்பியல்புகள். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதர். தமிழீழ தேசாபிமானிகளால் பெரிதும் போற்றப்பட்ட தலை சிறந்த கல்விமான். கல்வித் துறையில் நிறைந்த அறிவு படைத்தவர். பொறியியல் துறையில் விற்பன்னர். இவருக்கு அறிமுகமே தேவையில்லை. இவரது சாவு தமிழர் தேசத்திற்கு என்றுமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

1970 களின் இறுதிப் பகுதில் தாய் மண்ணை விட்டு வெளியேறினார். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் வாழ அவர் என்றும் விரும்பியதில்லை. இந்த அடக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வு சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். இந்த அடக்குமுறைக்குள் இருந்து தமிழீழ மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலைபெற்று சுதந்திரமாகவும் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதையே வாழ்வின் இலட்சியமாக வரித்துக்கொண்டவர். இந்த இலட்சியத்தால் உந்தப்பெற்று தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக நின்றவர். தமிழ் மக்களின் கல்வி,பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு வழிகளில் இறுதிவரை பங்காற்றி வந்தவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் உண்மைகளையும் உலகுக்கு பரப்புரை செய்தார். 

கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து தனது தாயகத்திற்கு வெளியே தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதைத்தான் இவர் அனைத்துலக அரங்கில் செய்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு பெரும் பங்காற்றினார்.

தமிழீழ கட்டுமானங்களில் அன்னார் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. பல்வேறு அச்சுறுத்தல்கள்,ஆபத்துக்கள் மிகுந்த போர்க்காலங்களிலும் தாய் மண் வந்து பணிசெய்தார். தமிழீழப்போராளிகள் சகல துறைகளிலும் விற்பன்னர்களாக உருவாக்கப்படுவதற்காக முன்னின்று உழைத்தார். 

அன்னார் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. என்றுமே பாராட்டுக்குரியவை.

கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘மாமனிதர்’ என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம்.

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

Previous Article

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *