தமிழர்களின் அடையாளமாக தொன்று தொட்டு ஆனையிறவு இருந்துள்ளது.இந்த இடமானது காலத்திற்கு காலம் தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.ஆனாலும் இது மீளவும் ஒரு அடக்கு முறையின் அடையாளமாக மாற்றம் பெறுகின்றதா என்ற கேள்வி என்று எல்லோர் முன்னும் எழுந்திருக்கின்றது.
ஆனையிறவு என்பது ஒருபுறம் பரப்பு கடலையும் ஏனைய பகுதிகள் சதுப்பு நிலங்களையும் பரட்டை காடுகளையும் கொண்ட ஒரு பெருவெளி பிரதேசமாக காணப்படுவதுடன் யாழ்குடா நாட்டையும் வன்னிப் பெருநிலப் பரப்பையும் இணைக்கும் வகையில் ஏறத்தாழ அரைமையில் நீளமான தாம்போதி (பாலம் )மூலம் இணைக்கப்பட்டிருக்கின்ற பெருந்தொகையான உப்பினை விளைவிக்கின்ற ஒரு பிரதேசமாகவும் இது காணப்படுகின்றது.
கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய வீதிப்புனரமைப்பின் தட்டுவன்கொட்டி கடலையும் ஆனையிறவு கடலையும் இணைக்கின்ற மூன்று பாலங்கள் இல்லாமல் போயுள்ளன என்று இக்கிரமவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
ஆனையிறவு
பச்சிலை பள்ளி தொடக்கம் பூநகரி கரைச்சி ஆகிய பிரதேசங்கள் ஆரம்பத்தில் காடுகளாக காணப்பட்டதால் சதுப்பு நில கடல் வற்று காலங்களில் யானைகள் இவ்விரு பிரதேசங்களில் இருந்தும் அடிக்கடி இடம் மாறிக்கொண்டன.இவ்வாறு இடம் பெயர்வதற்கு உகந்த குறுகிய மிகவும் ஒடுங்கிய பகுதியாக ஆனையிறவு காணப்பட்டது.இறவு என்றால் பள்ளம் அல்லது இறக்கம் அல்லது கடத்தல் எனப்படுகின்ற அந்த யானைகள் கடந்துள்ள இடம் காலப்போக்கில் ஆனையிறவு என தொன்று தொட்டு தமிழர்களால் குறிப்பிடப்பட்டு வருகின்றது.

இந்த ஆனையிறவை சூழ பழம்பெரும் கிராமங்களான தட்டுவன்கொட்டி இயக்கச்சி நாவல் கொட்டியான் குறிஞ்சாத்தீவு சுட்டதீவு ஊரியான் போன்ற பகுதிகள் காணப்படுகின்றன.இவற்றின் மைய நகரமாக இந்த ஆனையிறவு காணப்பட்டதாகவும் இந்த பகுதியிலேயே மிகவும் பழமை வாய்ந்த பாடசாலை தபால் நிலையம் சந்தை தேவாலயம் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு மரபுரிமை கொண்ட கண்ணகி அம்மன் ஆலயம் என்பன காணப்பட்டன.
கடந்த கால யுத்தம் காரணமாக இந்தப்பகுதி பாடசாலை பரந்தன் சிவபுரத்தில் இப்போது இயங்கி வருகின்றது ஏனையவை செயலற்றுப்பபோயுள்ளன. ஆனையிறவைப் பொறுத்த வரையில் 1760 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டச்சுக்காரரினால் காவல் கோட்டையாகவும் வாடி வீடாகவும் முதன் முதலில் அமைக்கப்பட்டது.
இக்கோட்டை காலப்போக்கில் அதாவது 1948 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு ஆங்கிலேயர் வெளியேறிய பின்னர் சுங்க இலாகாவினதும் வனப்பரிபாலன திணைக்களத்தினதும் சோதனை நிலையமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. அதன் பின்னர் 1958 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினது இராணுவ முகமாக மாற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளின் பின் 1961 ஆம் ஆண்டு சிறி;மாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து பிரதான வீதியூடாக செல்லும் பொதுமக்கள் வாகனங்களை சோதனையிடும் இடமாக காணப்பட்டதுடன் 1990இற்கு பின்னர் போர்காரணமாக யாழ் குடா நாட்டுக்கான தரைவழிப்பாதையும் துண்டிக்கப்பட்டதையடுத்து கொம்படி ஊரியான் கிளாலி ஆகிய கடல் மார்க்கப் பாதைகள் யாழ் குடா நாட்டுக்கான போக்குவரத்து பாதைகளாக பயன்படுத்தப்பட்டன.
ரஜ லுணு
இந்த நிலையில் 1991ஆம் ஆண்டு யூன் மாதம் 10 ஆம் திகதி விடுதலைப்புலிகளால் முதலாவது ஆகாய கடல் வெளி சமர் என்ற பெயரிடப்பட்ட தாக்குதல் தொடுக்கப்பட்டு நீண்ட காலம் போர் இடம்பெற்று பின் வாங்கினர்.அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஆனையிறவுப்பகுதி கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு யுத்த காலத்தில் போரில் ஈடுபட்ட இருதரப்புக்கள் தங்களது பலத்தை நிரூபிக்கும் இடமாகவும் ஆனையிறவு இருந்துள்ளது. இப்படி இந்த ஆனையிறவின் வரலாற்று நீள்கின்றது. 1989களின் பின்னர் செயலற்றுப்போன உப்பளம் நீண்ட போருக்கு பின்னர் 2004ஆம் ஆண்டு பொருண்மிய கட்டமைப்பின் கீழ் ஆனையிறவு உப்பு உற்பத்தி பேட்டை என்ற பெயரில் உப்பளம் ஆரம்பிக்கப்பட்டு ஆனையிறவு உப்பு என பொதியிடப்பட்ட உப்பு நாட்டின் பல பாகங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் இலங்கை முழுவதற்குமான உப்புத் தேவையை பூர்த்தி செய்து வந்த இந்த உப்பளம் பல்வேறு இரசாயன பொருட்களும் இரசாயன மூலப்பொருட்களும் உருவாகக் காரணமாக இருந்தது.போருக்கு பின்னர் ஆனையிறவு உப்பளத்தில் தற்போது உப்பு அறுவடை ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தின் உற்பத்தியான ‘ரஜலுணு’ என்ற பெயரில் அரசாங்க உப்புஉற்பத்தி கடந்த (29-03-2025) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.அதன் பிரகாரம் ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் உற்பத்தி செய்யப்படும் உப்பு ரஜ லுணு என்ற பெயரில் பொதி வருவதானது பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.