கந்தானை, வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றையதினம் (19-08-2024) இடம்பெற்ற குறித்த விபத்தில் 18 வயதான கிரிஷான் பெரேரா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் சாரதியும், பின்னால் சென்ற இருவரும் தலைக்கவசம் அணியாமல் வெலிகம்பிட்டியவில் இருந்து நீர்கொழும்பு வீதியை நோக்கி பயணித்த போது, வெலிகம்பிட்டிய சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் சமிக்ஞை செய்தனர்.
பொலிஸாரின் கட்டளையையும் மீறி மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் பிரதான வீதியை நோக்கிச் சாரதி செலுத்தியுள்ளார்.

இதன்போது, பின் இலக்கத் தகடு இன்றி பயணித்த மோட்டார் சைக்கிள் நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியிக்கு பிரவேசித்த நிலையில் நீர்கொழும்பில் இருந்து வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, விபத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உயிரிழந்தவரின் சகோதரர் உள்ளிட்ட குழுவினர் பொலிஸ் அதிகாரிகளுடன் காரசாரமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.