யாழ்ப்பாணம்(Jaffna) – தீவகம், வேலணை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இன்று(24.11.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வேலணை துறையூர் சந்தியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வேலணை ஐயனார் சனசமூக நிலைய மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் மலர் மாலைகள் அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை கௌரவிக்கும் முகமாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு சம்பூரில் இன்று (24) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.