பாகம் இரண்டின் ஆறாவது தொடர்

1984 அக்டோபர் 31 ஆம் நாள் திருமதி இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.அவரின் இழப்பு பற்றி பாலா அண்ணா குறிப்பிடுகையில்

திருமதி. இந்திராகாந்தியின் திடீர் மரணம் ஈழத் தமிழினத்தை ஆழமான சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழரின் அரசியில் அபிலாசையும், நம்பிக்கையும் இடிந்து நொறுங்கின. கடைகள், பாடசாலைகளை மூடி, வீடுகள் எங்கும் கருப்புக் கொடிகள் பறக்கவிட்டுத் தமிழீழ மக்கள் துக்கம் கடைப்பிடித்தபோது, தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படையினர் வீதிகளில் நடனமாடி மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். தமிழரின் ஆயுதப் போராட்ட இயக்கத்தைப் பொறுத்தவரை திருமதி. காந்தியின் திடீர் மறைவானது ஈடுசெய்ய முடியாத பெரியதொரு தார்மீக சக்தியைத் தமிழரின் சுதந்திர இயக்கம் இழந்து தவித்தது. இந்திரா காந்தி  அம்மையார் ஆழமான ஆளுமையும், மதிநுட்பமும் மிகுந்தவர். இலங்கை அரசியலின் சிக்கலான பரிமாணங்களை நன்கு அறிந்தவர். தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினையில் ஆழமான அக்கறையும், அனுதாபமும் கொண்டவர். தமிழரின் உரிமைகளையும்,  அரசியல் அபிலாசைகளையும்; வென்று கொடுக்க வேண்டும் என்பதில் உறுதி பூண்டிருந்தவர்.

 சிங்கள அரசியல் தலைவர்களின் மன  இயல்புகளையும், அவர் நன்கு புரிந்து வைத்திருந்ததால் அவர்களை அச்சமூட்டிப் பணியவைக்கும் தந்திரங்களையும் கையாண்டு வந்தார். வங்காளதேசம் தனியரசாக உருப்பெற்றமைக்கு இந்திரா காந்தியின் பங்களிப்புக் காரணமாக இருந்த வரலாற்றை ஜெயவர்த்தனா நன்கு அறிந்திருந்தார்.தமிழரின் இனப் பிரச்சினையிலும் திருமதி. காந்தி தலையிட்டுத் தமிழருக்குத் தனியரசை உருவாக்கிக் கொடுக்கலாமென ஜெயவர்த்தனாவுக்கு அச்சம் இருந்து வந்தது. ஜெயவர்த்தனாவின் இந்த அச்சம் பற்றி “திரு.டிக்சிட்” குறிப்பிடுகையில்! “திருமதி காந்தி உயிரோடு இருந்திருப்பாராயின் 1985 ஆம் ஆண்டிலேயே இலங்கையை இரு நாடுகளாகப் பிளவுபடுத்தியிருப்பார், என்று ஜெயவர்த்தனா என்னிடம் அச்சம் தெரிவித்தார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

“எமது விடுதலை அமைப்புகளைச் சேர்ந்த சுதந்திரப் போராளிகளுக்கும்,  சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கும்; மத்தியில் பகை நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்குடன் இந்திய அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை நாம் மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்தோம். இந்திய அரசின் மத்தியஸ்துவத்தையும்,  நல்லெண்ண சமரச முயற்சிகளையும்,  மனமார வரவேற்று,  எமக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகளையும், உத்தரவாதங்களையும், ஏற்றுக்கொண்டு,  ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் போர் நிறுத்தம் செய்வதென,  இம்மகஜரில் கைச்சாத்திட நாம் கூட்டாக முடிவெடுத்துள்ளோம். எமது முடிவு ஒரு நல்லெண்ண சூழ்நிலையையும்,  இயல்பு நிலையையும் உருவாக்கிக் கொடுக்கும் என நம்புகிறோம். இந்தச் சமரசப் புறநிலையை ஏதுவாகக் கொண்டு சிறீலங்கா அரசாங்கம் ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கு மென எதிர்பார்க்கின்றோம். இத்தீர்வுத் திட்டம் எமக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக; அமைந்திருந்தால் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியற் தீர்வு காண்பது குறித்துப் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம்,

“ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் போர் நிறுத்தம் செய்ய நாம் இணங்கிய போதும்,  போர் நிறுத்த உடன்பாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும், எமக்கு அனுகூலம் அற்றவையாகவே உள்ளன. இவை குறித்து எமது கருத்துக்களையும், மாற்று யோசனைகளையும்; இங்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்”.

“போர் நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து, அரசியற் தீர்வு குறித்து ஒரு விபரமான உருப்படியான திட்டத்தைச் சிறீலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும்,  என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த அரசியல் தீர்வுத்திட்டம் எம்மால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைந்தால் மட்டுமே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக நாம் எடுத்துக்கூற விரும்புகின்றோம். தமிழரின் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க மறுத்து, காலம் காலமாக மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள அரசுகள்,  தமிழ் மக்களை ஏமாற்றி இழைத்த நம்பிக்கைத் துரோகத்தின் கசப்பான வரலாற்று அனுபவத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்”.   “அத்துடன் சிங்கள அரசுகள் தமிழ்த் தலைவர்களோடு செய்து கொண்ட உடன்பாடுகள், ஒப்பந்தங்களை நிறைவு செய்யாது முறித்துக் கொண்டமையும் உலகறிந்த உண்மை. அது மட்டுமின்றி தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதைத் தட்டிக் கழித்து, இழுத்தடிக்கும் ஒரு மோசமான நடைமுறையையும்; சிங்கள அரசு கடைப்பிடித்து வருகிறது என்பதையும், நாம் இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆகவே! இந்த ஏமாற்று அரசியல் வித்தையில் நாம் பலிக்கடாவாக விரும்பவில்லை. அதனால்தான் பேச்சுக்களில் பங்குகொள்வது பற்றி நாம் தீர்மானிப்பதற்கு முன்பாக ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தைச் சிங்கள அரசு முதலில் எமது பரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்”.

ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் புதுடில்லியில் சாதகமான வரவேற்பைப் பெறவில்லை. டில்லியிலிருந்து என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட “திரு.சந்திரசேகரன்” எமது  நிலைப்பாட்டில் இந்திய அரசு அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குச் சிறீலங்கா அரசு மீது ஈழத் தேசிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனையை விதித்துள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சு கருதுவதாகவும் அவர் விளக்கினார். எமது மகஜர் குறித்து இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை நான் பிரபாகரனிடம் எடுத்துக் கூறினேன்”.

“இப்பிரச்சினை குறித்து முன்னணித் தலைவர்கள் அவசர சந்திப்பு ஒன்றை நிகழ்த்திக் கலந்துரையாடினர். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னராக இலங்கை அரசு ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டுமென்ற எமது நிலைப்பாட்டில் நாம் உறுதி பூண்டு நிற்கவேண்டும்! என பிரபாகரனும், ஏனைய கூட்டணித் தலைவர்களும் ஏகமனதாக முடிவெடுத்தனர்”. “முன்னணித் தலைவர்களின் முடிவை திரு.சந்திரசேகரன் மூலமாக நான் டில்லிக்குத் தெரியப் படுத்தினேன். எமது விடாப்பிடியான நிலைப்பாடு குறித்து ஆத்திரமடைந்த ”  “சந்திரசேகரன்” பிரபாகரனையும்  ஏனைய கூட்டணித் தலைவர்களையும் விரைவில் இந்திய அரசு டில்லிக்கு அழைத்துத் தனது அதிருப்தியை நேரில் தெரியப்படுத்தும் என எச்சரித்தார்”. “ராஜீவ் அரசுக்கும், தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் மத்தியில் நேரடியான முரண்பாடும், மோதலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது போல எனக்குத்தென்பட்டது இப்படி பேர்ச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்க தேசியத் தலைவருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என சில மூத்த போராளிகளின் கருத்தாகயிருந்தது, இது அதற்கு அமைவாக

“01/10/1984 அன்றுதேயத்தலைவர் அவர்களிற்கும் செல்லி மதி  அவர்களிற்கும் திருமணம் நடைபெற்றது

01/10/1984 தலைவர் பிரபாகரனிற்கு இந்தியாவில் உள்ள திருப்பூர் முருகன் கோயிலில் வைத்து சில குறிப்பிட்ட ஆதரவாளர்கள் முன்னிலையில் சமய முறைப்படி சட்டரீதியாக புங்குடிதீவைச் சேர்ந்த மதிவதனி என்பவருக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும்  திருமணம் நடைபெற்றது.இவர்களிற்கு முதலாவது மகனாக சால்ஸ் அன்ரனியும் இரண்டாது மகளாக துவராகாவும் மூன்றாவது மகனாக வன்னியில் பிறந்தவரான பாலச்சந்திரன் ஆகும்இவர்களிற்கு என்ன நடந்தது என்பதை பின்னர்பார்ப்போம்

 

 19/11/1984 அன்று கட்டுவன் பதியிலும் மேலும் பல இடங்களில் சிறு சிறு தாக்குதல்கள் நடைபெற்றது 

அன்று கட்டுவன் தெல்லிப்பளை வீதியில் உள்ள வறுத்தலைவிளானில் வைத்து வாகனம் மீது நிலக் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அத்தாக்குதலில் பிரிகேடியர் ஆரியபெருமாள் உட்பட ஒன்பது இராணுவத்தினர் சொல்லப்பட்டனர்.


18/12/1984 அன்று புல்மோட்டையில் விடுதலைப் புலிகள் நடத்திய நிலக் கண்ணிவெடி தாக்குலில் ஒரு டிரக் வண்டி சேதம் அடைந்தது; இரண்டு உயர் அதிகாரிகள் உற்பட முப்பத்தைந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.எமது தரப்பில் இரண்டு போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்


15/02/1985   – (6) ஆறாவது பயிற்சி முகாம் பற்றி அதில் பயிற்சி எடுத்தபோராளி நாடன்  குறிப்பிடுகையில்,

 15/02/1985/ தொடங்கி 15/10/1985 வரை பயிற்சி முடிந்தது.

” எமது பயிற்சிமுகாமிற்கான இளைஞர்களை  தமிழீழம் இருந்து பொறுப்பாளர் குண்டப்பாவே படகு மூலம் கொண்டு வந்தார். அதில் என்னோடு சேர்த்து சுமார் முன்னூற்று அறுபது போராளிகள் அப் பாசறைக்கு வந்து சேர்ந்தோம்.
15/10/1985 அன்று எங்களின் ஆரம்ப இராணுவ பயிற்சி ஆரம்பம் ஆனது, 

பயிற்சி முகாம் அமைந்த இடம் மணியண்ணையின் தோட்டம் கும்புறுப்பிட்டி சேலம் மாவட்டம் , அதில் பயிற்சிக்கான பிரதான பொறுப்பாளராக தளபதி பொன்னம்மான் இருந்தார்.ஆறாவது  பயிற்சி முகாமிற்கான பொறுப்பாளராக  லூக்காஸ் அம்மான் இருந்தார். பயிற்சிகளை மேற்பார்வை செய்வதற்காக மேலாளர்  மேனன் இருந்தார்.


எங்களுக்கான போராட்ட ரீதியான வகுப்புக்களை மாதவன் மாஸ்டர் மற்றும் இந்திரன் இருவரும் எடுத்தார்கள். எங்களிற்கான உடல் பயிற்சி ஆசிரியராக றோய் அவர்கள் இருந்தார். எங்களோடு பயிற்சி எடுத்தவர்களில் எனது ஞாபகத்தில் உள்ளோர், யோகரெத்தினம் யோகி, திலீப், றகீம், பன்னீர், புஸ்பன், பத்மன், முஸ்த்தப்பா, கலா, பாரத், ராம், நவாஸ், நளன். இவர்கள் என்னோடு பயிற்சி எடுத்தார்கள். முந்நூற்று அறுபது பேருக்கும் சிறப்பான முறையில் பயிற்சி முடிந்தது. தலைவர் அவர்கள் திடீர், திடீர்ரென வந்து பொறுப்பாளர்களோடு கதைத்து விட்டுச் செல்வார்.பயிற்சி முடிந்த பின் ஒவ்வொரு போராளிகளோடும் தலைவர் தனித்தனியாகக் கதைத்தார். அதில் என்னோடும் அவர் கதைத்தார்.அடுத்து சிறு ,சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அனைவரும் தமிழீழம் அனுப்பப்பட்டோம்.

எங்களுக்கு பயிற்சி தந்த “றோய்” அவர்கள் பயிற்சி முகாம் முடிந்த பின் தமிழீழம் சென்று அங்கே சிங்களப் படையோடு சண்டையிட்டு காயம் அடைந்து மீண்டும் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா கொண்டு வரப்பட்டு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் வீரச்சாவு அடைந்தார். அவரின் வித்துடல் அப் பயிற்சி முகாமிலே அடக்கம் செயப்பட்டது என அவர் குறிப்பட்டார்

.இனி பால அண்ணா சொல்வதைப்பார்போம்

இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகளும் மற்றும் வேறு ஈழப் போராளி அமைப்புக்களும் வட கிழக்கில் இராணுசத்திற்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருந்தார்கள் இதனால் நாள் ஒன்றுக்கு சராசரி 100 இராணுவம் செத்துக்கொண்டுயிருந்தனர், இதனால் இந்தியாவின் காலில் விழுந்தது இலங்கை அரசு எப்படியாவது புலிகளுடன் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்துங்கள் என்பதே அவர்களின் அழுத்தமாகயிருந்தது, விரும்பியோ விரும்பாமலே அவ் உதவியை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய தள்ளப்பட்டது, ஏனனில் இந்திய செய்ய மறுத்தால் இலங்கை வேறு நாடுகளிடம் போய் அவ் உதவியை வேண்டினால் இந்தியவின் பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தலாக அமையலாம் என இந்தியபயந்தது அதனால் புலிகளை வலுக்கட்டாயமாகப் பேச்சுக்கு இழுத்தது இந்திய,இதைப் பின்னர் பார்பாப்போம் அதற்கு முன் குமுதினிப்படுகொலை பற்றி விரிவாகப் பார்ப்போம்


குமுதினிப் படுகொலைகள் – 15.05.1985

யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தார்கள். நெடுந்தீவில் வாழும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கடல் கடந்து படகுகளில் யாழ் நகருக்கு வரவேண்டியதால் அவர்கள் நாளாந்தம் தமது தேவைகளை நிறைவேற்றப் படகுகளில் பிரயாணம் செய்வது தவிர்க்க முடியாத விடயமாக அமைந்தது. நெடுந்தீவு மக்களின் கடற் போக்குவரத்திற்கு குமுதினிப்படகுச் சேவையே பெரிதும் உதவியது. இப்படகுச் சேவை நாளாந்தம் காலை 7.00 மணிக்கு நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து குறிகட்டுவானுக்கும் பின்னர் மாலை 5.00 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவுத் துறைமுகத்துக்கும் பயணிக்கும்.

1985ஆம் ஆண்டு மே மாதம் பதினைந்தாம் திகதி குமுதினிப் படகு வழமைபோல தனது சேவையை ஆரம்பித்தது. அன்று ஏறக்குறைய அப்படகில் அறுபதிற்கும் மேற்பட்ட பயணிகள் பிரயாணம் செய்தார்கள். நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து  குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமயம் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ள நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினரின் இரண்டு பீரங்கிகள் பொறுத்தப்பட்ட விசைப்படகுகள் குமுதினிப் படகினை அண்மித்த போது அதில் பயணித்த மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கினர். அவ்விரண்டு விசைப்படகுகளில் கடற்படையினர் தங்களுடன் கோடரி, கத்தி, அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களையும் எடுத்து வந்திருந்தனர்.

இதைப் பார்த்த மக்கள் செய்வதறியாது கதறி அழுதார்கள். வந்த கடற்படையினர் குமுதினிப் படகினுள் மூன்று மாதக் குழந்தை உட்பட அனைத்துப் பயணிகளையும் ஒவ்வொருவராகக் கீழ்த்தளத்திற்கு அழைத்து மற்றவர்கள் அறியாமல் தாங்கள் எடுத்து வந்த கூரிய ஆயதங்களினால் வெட்டிக் கொன்றனர். கடற்படையின் இத் தாக்குதலில் நாற்பத்திரண்டிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.  இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமது அங்கங்களை இழந்தார்கள். இவர்கள் அனைவரும் மாலை கரையொதுங்கிய குமுதினிப் படகிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.

சம்பவம் தொடர்பாக நெடுந்தீவைச் சேர்ந்த எஸ்.புஸப்ராணி தெரிவிக்கையில்:

“அனுராதபுரத்தில் நடைபெற்ற கொடூரச் சம்பவத்திற்குப் பதிலடியாகவே இக்குமுதினிப் படுகொலை நடைபெற்றது. இதில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் எனது உறவினர் பலர் இறந்துள்ளனர். இச்சம்பவத்தில் நான் வெட்டிக்

காயப்படுத்தப்பட்டேன்.

கர்ப்பிணித் தாய்மாரைத் தாக்கும்போது வயிற்றிலுள்ள குழந்தை “கொட்டியா” (LTTE) என்று கூறித் தாக்கினார்கள். பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடின்றிப் பலர் தாக்கப்பட்டனர்.”நேரில் கண்டவர் கூறியதாவது:

15.05.1985 அன்று குமுதினிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:நேரில் 01கண்டவர் கூறியதாவது:

“ எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.

  1. பசுபதி நிர்மலாதேவி (வயது 20)
  2. கந்தையா சதாசிவம் (வயது 56 – ஆசிரியர்)
  3. ஜேசுதாசன் (வயது 46 – கடற்தொழில்)
  4. மாரியம்மா
  5. ஆ. கனகலிங்கம் (வயது 34 – கடற்தொழில்)
  6. தில்லைநாதன் (வயது 32 – கடற்தொழில்)
  7. ஞானப்பிரகாசம் மரியமாணிக்கம் (வயது 45 – கடற்தொழில்)
  8. சடையர் கோவிந்தன் (வயது 46 – கடற்தொழில்)
  9. செபமாலை அந்தோனிப்பிள்ளை (வயது 45 – கடற்தொழில்)
  10. செபமாலை கிருஸ்ரி (வயது 24)
  11. நிமிலி (வயது 18)
  12. அனுசியா (வயது 23)
  13. பேர்ணாட்கிறார் பூரணம் (வயது 22)
  14. வெ. கந்தையா (வயது 44 – கடற்தொழில்)
  15. செ. சந்திரகுமார் (வயது 30 – கடற்தொழில்)
  16. தருமலிங்கம் பாபு (வயது 13)
  17. குமாரசாமி விநாயகம் (வயது 38 – கடற்தொழில்)
  18. சபாபதி தெய்வானை (வயது 68 – கடற்தொழில்)
  19. ஞானப்பிரகாசம் தேவசகாயம் (வயது 42 – கடற்தொழில்)
  20. வைத்திலிங்கம் சதாசிவம் (வயது 45 – கடற்தொழில்)
  21. இராமன் முருகன் (வயது 52 – கடற்தொழில்)
  22. கரையூர் சின்னையா (வயது 35 – அரச ஊழியர்)
  23. முத்தன் மணிவண்ணன் (வயது 13)
  24. றொகேசியன் சந்திரகுமார் (வயது 18 – மாணவன்)
  25. தொப்பை நாகேந்திரம் (வயது 23)
  26. சின்னவன் அந்தோனி (வயது 65)
  27. இராமநாதன் (வயது 16)
  28. வேலுப்பிள்ளை புஸ்பராசா (வயது 22)
  29. ஞானசேகரம் (வயது 28 – தபால் அதிபர்)
  30. விசுவலிங்கம் சுபாஜினி (7மாதக் குழந்தை)
  31. கனகம்மா (வயது 55 – கடற்தொழில்)
  32. பழனி மோகநாதன் (வயது 27 – கடற்தொழில்)
  33. தர்மலிங்கம் அமிர்தலிங்கம் (வயது 18)
  34. பசுபதி நிர்மலாதேவி (வயது 19 – மாணவி)
  35. நவசிவாயம் கந்தையா (வயது 45 – இ.போ.ச ஓட்டுநர்)
  36. இராமலிங்கம் பரலோகநாதன் (வயது 35 – கமம்)
  37. கார்த்திகேசு (வயது 45)
  38. க. பார்வதிப்பிள்ளை (வயது 40)
  39. சி.நாகேந்திரன் (வயது 32 – கடற்தொழில்)
  40. குசலகுமாரி (வயது 28)
  41. சாந்தலிங்கம் (வயது 1)
  42. ஞா. சரோஜாதேவி (வயது 24 – ஆசிரியர்)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

03/07/1985திம்பு பேச்சுவார்த்தைக்கு புலிகளை இழுக்கும் பொறிமுறையை உருவாக்கிய இந்தியா.

*****************************”************************************

 “1985 ஆம் ஆண்டு யூ லை மாதம் 3 ஆம் நாள், பிரபாகரனும், நானும், ஏனைய கூட்டணி அமைப்புகளின் தலைவர்களும், அவர்களது அரசியல் உதவியாளர்களும், இந்திய இராணுவ விமானம் மூலம் புது டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தலைநகரின் மையத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டோம்”

. “நாம் அங்குச் சென்றதும் “றோ” புலனாய்வு அதிகாரிகளும், இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும், மாறி மாறி எம்மைச் சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கவுரைகள் அளித்தார்கள். தமிழ்ப்புரட்சி அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, ஜெயவர்த்தனாவை இணங்க வைப்பதற்கு, ரொமேஸ் பண்டாரி மேற்கொண்ட இராஜதந்திர சாணக்கியத்தைப் பாராட்டினார்கள். இந்தியாவுக்கு இது ஒரு இராஜதந்திர வெற்றி எனக் குறிப்பிட்ட அவர்கள்;”

 “இதன் மூலம் தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூறினார்கள்.

“ஈழத் தேசிய விடுதலை முன்னணித்” தலைவர்கள் சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு எவ்வித நிபந்தனையும்  விதிக்கக் கூடாது என்பதே! இந்த விளக்கவுரையின் அடிநாதமான வேண்டு கோளாக அமைந்தது”

இந்திய அரசு அதிகாரிகளின் அறிவுரைகளும், அழுத்தங்களுக்கும் பிரபாகரனும் சரி, ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் சரி,  பணிந்து இணங்கிப் போகவில்லை.

எல்லோருமே ஒருமித்த கருத்துடன் தமது நிலைப்பாட்டில் உறுதிபூண்டு நின்றனர். முடிவின்றி இழுபட்டுக் கொண்டிருந்த இப்பிரச்சினை இறுதியாக “றோ” புலனாய்வுத்துறை அதிபர் திரு. “சக்சேனா”விடம் கையளிக்கப்பட்டது.

“புதுடில்லியிலுள்ள தனது தலைமைச் செயலகத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தார் திரு.”சக்சேனா”. பல மாடிகளைக் கொண்ட வானளாவிய பிரமாண்டமான கட்டிடம்! கட்டிட வாசலிலே ஆயுதம் தரித்த “கரும்பூனை அதிரடிப் படைவீரர்கள்” எம்மைச் சூழ்ந்து கொண்டு; உயர்மாடியில்  உள்ள “சக்சேனா”வின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்”

. “கடுமையான முகத்துடன், முறைப்பான பார்வையுடன்; எமக்காகக் காத்திருந்தார்”றோ” அதிபர். அவரது அகன்ற மேசைக்கு முன்னால் இருந்த நாற்காலிகளில் பிரபாகரனும், நானும், மற்றும் ரெலோ தலைவர் சிறீசபாரெத்தினம், ஈரோஸ் தலைவர் பாலகுமார், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா ஆகியோர் அமர்ந்து கொண்டோம். முதலில் தனது உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டுத் தனது வழக்கமான பாணியில், கனத்த குரலில் நேரடியாகவே விடயத்திற்கு வந்தார்.” தமிழரின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நேர்மையான முயற்சிக்குத் தமிழ்த் தீவிரவாதத் தலைவர்கள் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! என வலியுறுத்திக்கூறிய திரு. “சக்சேனா” ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

உங்களது விட்டுக்கொடுக்காத கடும்போக்கைப் புதிய இந்திய அரசு பொறுத்துக்கொள்ளாது, 

உங்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் பாதுகாப்பான புகலிடச் சலுகைகளை மறுக்கவும் தயங்காது, என மிரட்டினார் “சக்சேனா”. பூட்டான் தலைநகரமான “திம்புவில்” இன்னும் இரு வாரங்களில் பேச்சக்கள் ஆரம்பமாக உள்ளன. இப்பேச்சுக்குள் நிபந்தனையற்ற முறையில் நடைபெறும்  பேச்சுக்களில் பங்குபற்ற நீங்கள் மறுத்தால்! இந்திய மண்ணிலும்,  இந்திய கடற்பரப்பிலும், நீங்கள் செயற்பட முடியாது போகும் என்று கண்டிப்பான குரலில் கத்தினார். 

நான் வசனத்திற்கு வசனம் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன்.

ஆத்திரத்தை விழுங்கியபடி துயரம் தோய்ந்த முகங்களுடன் “சக்சேனா”வை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் போராளி அமைப்புகளின் தலைவர்கள். ஏதோ சொல்வதற்காக வாயசைத்தார் பத்மநாபா;

ஆனால் சப்தம் வெளிவராது தொண்டைக்குள் மடிந்து போயிற்று. மௌனம் சாதித்தபடி ஆழமான சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார் பிரபாரகன். கெரில்லாத் தலைவர்களின் கொதிப்புணர்வைப் புரிந்து கொண்ட சக்சேனா; “நான் கூறியவற்றை நீங்கள் ஆழமாகப் பரிசீலனை செய்து, ஆக்கபூர்வமான பதிலை நாளைய தினம் கூறினால் போதும் என்றார்”.அத்துடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.

நாம் அனைவரும் விடுதிக்கு திரும்பிய உடனேயே ஒரு அவசரக் கலந்துரையாடலை நிகழ்த்தினோம்.

தனது கருத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிவித்தார் பிரபாகரன். பேச்சுக்களில் பங்குகொள்ள மறுத்து வீணாக இந்திய அரசைப் பகைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் பங்குகொண்டு எமது போராட்ட இலட்சியத்தைக் கைவிடாது,  எமது அரசியல் கொள்கையை எதிரியிடம் எடுத்துச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது “என்னைப் பொறுத்தவரை இந்திய அரசைப் பகைக்காமல் ஈழத் தேசிய விடுதலை முன்னணி பேச்சுக்களில் கலந்து கொள்வதுதான் சிறந்த வழி என்றார் பிரபாகரன்”. அவரது நிலைப்பாட்டையே நானும் ஆதரித்தேன். ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் புலிகளின் தலைவரது கருத்தை ஏகமனதாக ஆதரித்தனர்.

 நிபந்தனையற்ற முறையில் சமாதானப் பேச்சுக்களில் பங்கபற்றுவது என்ற ஈழத்தேசிய விடுதலை முன்னணித் தலைமையின் முடிவு மறுநாள் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதாவது!  தமிழ் விடுதலைப் போராளி அமைப்புகளுக்கு வழங்கி வந்த சகல இராணுவ உதவிகளையும்,  இந்திய அரசு நிரந்தரமாக நிறுத்தவிட வேண்டுமென்றும்,  தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுமாறு தமிழ் அமைப்புகளை நிர்ப்பந்திக்க வேண்டுமென்றும்,  ஒரு கண்டிப்பான நிபந்தனையை விதித்தார். இந்த நிபந்தனையை நிறைவு செய்வதாக இந்திய அரசு உறுதியளித்ததை அடுத்துப் போர்நிறுத்தம் செய்வதற்கு ஜெயவர்த்தனா இயங்கினார். போருக்கு ஓய்வு கொடுப்பதும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குமான நாட்களும் நிர்ணயிக்கப்பட்டன. தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும், சிறீலங்கா அரசுக்கும் மத்தியில் 1985 யூன் நடுப்பகுதியில் போர் நிறுத்தத்தைச் செயற் படுத்துவது என்றும்   இந்திய அரசின் மத்தியஸ்துவத்தின் கீழ் மூன்றாம் நாடான இமாலய இராச்சியமான பூட்டானில் யூலை நடுப்பகுதியில் பேச்சுக்களைத் தொடங்குவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. மாற்று இயக்கங்கள் “திம்பு”பேச்சுவார்த்தையில் எதிர்ப்பு தெரிவிக்காமை எமது அமைப்பிற்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது. 

13/07/1985 பூட்டான் திம்புவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஈழப் போராளிகள் இந்திய  மற்றும் இலங்கை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 இதில் எமது தரப்பில் அன்ரன் மாஸ்ட்டர், திலகர், பேவி அண்ணை இதை ஒழுங்குபடுத்தியவர்  பாலா அண்ணை.

  “புளொட்”சார்பாக திரு வாசுதேவா இவர் லெப்.பரமதேவாவின் அண்ணன் ஆவார். E.P.R.L.P சார்பாக வரதராஜப்பெருமாள், ரெலோ சார்பாகப் போனது திரு.சாள்ஸ், நடுவர் சத்தியஜேந்திரா  லோயர், ஈரோஸ் சார்பாக திரு சங்கர், தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாகப்போனது சம்மந்தர். இலங்கை அரசாங்கம் சார்பாக ஏச். யெ. ஜேவர்த்தனா, இந்தியா சார்பில் “றோ” அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கருணாநிதியின் கருத்தைப் பின் தொடர்பவர்களான மாற்று அமைப்புக்கள்,  இலங்கை தமிழர்களிற்கான தீர்வு மாகாணசபை அதாவது வடகிழக்குக்கு தனித்தனி முதல் அமைச்சர்கள் என்பதே! அவர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது.

 எமது அமைப்புச் சார்பான அன்ரன் மாஸ்ட்டர் அவர்கள் தமிழீழமே இலங்கை தமிழர்களிற்கான நிரந்தரத் தீர்வாக அமையும், என தெரிவித்தார்கள்.

அதற்கு இந்திய அதிகாரிகள்! “சிறுபாண்மை நீங்கள் பெரும்பாண்மை சிங்களவர்கள் நீங்கள் இரண்டாகப் பிரித்தால் அவர்கள் மற்றும் சிறுபாண்மை முஸ்லிம்கள் உள்ளார்கள் அதனால்!  மூவின மக்கள் வாழும் பிதேசமாக கிழக்கு இருக்கட்டும்; வடபகுதியில் மட்டும் ஒருமுதலமைச்சர் இருப்பார்; அது தமிழர்களாகதான் இருக்கும்”  என தெரியப்படுத்தினர். 

ஆனால் பேச்சு வார்த்தைக்குப் போக முன்னரே எம்.ஜி.ஆர் தலைவருக்குச் சொன்ன விடயம் இதுதான் “தமிழீழத்தை தவிர எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளாதே! எக்காரணம் கொண்டும் கருணாநிதியோடு உறவு வைத்துக்கொள்ளாதே!

அப்படி வைத்தால் எந்த விடயத்திற்கும் என்னிடம் வர வேண்டாம்” என சொல்லி இருந்தார்.இது எமது தரப்பிற்கு நன்கு தெரியும், அதனால் அவர்கள் இறுக்கமாக நின்றார்கள். பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி முடிவடைந்தது. நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தலைவர்  வெளிப்படையான அறிக்கையை மக்களிற்கு தெரியப்படுத்தினார். அதைப் பாருங்கள்…! திம்புப் பேச்சு வார்த்தையின் போது 1985 ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் மீள் வெளியீடு;

திம்புப் பேச்சு வார்த்தையின் போது 1985 ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் மீள் வெளியீடு காலத்தின் தேவை கருதி .!

“எமது தேசிய சுதந்திரப் போராட்டம் இன்று முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒரு உள்நாட்டு நெருக்கடியாகத் தோன்றிய எமது பிரச்சினை இன்று உலகத்தை ஈர்க்கும் ஒரு சர்வதேச நெருக்கடியாக  விஸ்வரூபம் கொண்டுள்ளது.”

“சிங்கள அரசானது எம்முடன் தனித்து நின்று போராடவில்லை. ஏகாதிபத்திய நாசகார சக்திகள் அனைத்தையும் தனக்குப் பக்கபலமாக அணி திரட்டி எமது மக்களுக்கு எதிராக ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடாத்தி வருகிறது, எமது கோரிக்கை என்ன? எமது அரசியல் இலட்சியம் என்ன? என்பதில் நாம் மெளனமாக இருந்து விடவில்லை . எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிய திட்டம் ஒன்றை நாம் முன்வைத்தோம்.” 

“நாமொரு தேசிய இனம் என்ற ரீதியிலும், வரலாற்று ரீதியாக அமைந்த எமது பரம்பரைத் தாயக பூமி எமது சொத்துடமை என்பதாலும், எமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை எமக்குண்டு! இந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலேயே;

 எமது தனியரசுப் போராட்டம் அமைந்திருப்பதால் எமது போராட்டம் நியாயமானது என்பதை விளக்கியிருந்தோம்.”

“தேசிய சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டம் நீண்ட வரலாற்றையுடையது. பல வடிவப் போராட்டங்களால் பரிணாமம் பெற்றது. காந்தியப் பாதையில், அமைதிவழிப் பாதையில், மொழிஉரிமை கோரி, சமஉரிமை கோரி, சமஷ்டி கோரி, நடைபெற்ற அகிம்சை வடிவப் போராட்டங்கள் அனைத்துமே எதிரியின் இராணுவ ஒடுக்கு முறையால் அடக்கியொடுக்கப்பட்டன”.

“இறுதியில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தனியரசுக் கோரிக்கை பிறந்தது. அது புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவம் பெற்றது.”

“இப்படியாக தமிழரின் அரசியல் போராட்ட வரலாற்றின் உச்ச கட்டமாகவே தமிழீழக் கோரிக்கையும்; அதனை அடையும் மார்க்கமாக ஆயுதப் போராட்டமும், பரிணமித்தது என்பதை விளக்கியிருந்தோம்”.

“தமிழீழ மக்களின் தேசியத்திற்கும்,தாயகத்திற்கும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கும்,  உத்தரவாதம் அளிக்கப்படாத எந்தவொரு தீர்வையும், நாம் அங்கீகரிக்கப் போவதில்லை என்பதே நமது உறுதியான நிலைப்பாடாக இருந்தது.ஆனால்! சிங்கள அரசு எமது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்கள இனவாத ஆட்சியாளர் ஒரு இராணுவத் தீர்வையே விரும்புகிறார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளிலிருந்து தெட்டத் தெளிவாகியுள்ளது. எமது தேசிய சுதந்திரப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் பூதாகரமாகத் திரிபுபடுத்திக் காட்டி.  சுதந்திரப் போராளிகளை வன்முறைப் பித்தர்களாகச் சித்தரித்துக் காட்டியும், இராணுவரீதியாக எம்மை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்”.

“இந்த இலக்கில் அவர்கள் முழுச்சிங்கள தேசத்தையுமே இராணுவ மயமாக்கி வருகிறார்கள். பெரியதொரு இனயுத்தத்திற்கு ஆயத்தங்கள் செய்து வருகின்றனர். தர்மமும், உண்மையும் எமது பக்கம் சார்ந்திருக்க அதுவே எமது பலம் .அதர்மமும், பொய்மையும் எதிரியின் பக்கம் சார்ந்திருக்க, அதுவே அவனின்பலவீனம்”.

“ஈற்றில் வெற்றி கொள்வதுநாம். ஏனெனில் என்றும் அழியாத தர்மம் எமக்குப் பக்கபலமாக இருக்கின்றது”.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு .வே .பிரபாகரன் அவர்கள் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

பூட்டான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமைக்கு இந்தியா ஈழத் தமிழர்கள் மீது வைத்து இருக்கும் சந்தேகமே காரணம்.

“கொலம்பேஸ்” என்பவரால் அத்துமீறி அமெரிக்காவின் செவ் இந்தியர்களின் நாட்டைப்பிடித்து அங்கு இருந்த செவ் இந்தியர்களை கொலை செய்த பின்னர் அமெரிக்கா என்ற நாட்டை அவர் உருவாக்கினார்.

 அதையடுத்து இங்கிலாந்தில் உள்ள முதலாளி மற்றும் செல்வந்தர்கள் அனைவரும் இங்கிலாந்தில் இருந்து நிரந்தரமாக அமெரிக்காவிற்குக் குடியேறினார்கள். 

அதனால் சில குறிப்பிட்ட காலம் இங்கிலாந்து ஒரு வறிய நாடாக இருந்தது மட்டும் அல்லாமல், அனைத்து தேவைகளிற்கும் அமெரிக்காவிடமே கை ஏந்த வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.அது போல் இலங்கையில் தமிழீழம் என்பது அமைந்தால்!  குறிப்பா தமிழகத்தில் இருக்கும் முதலாளிமார்களும், செல்வந்தவர்களும் தமிழீழத்திற்கு நிரந்தரமாகாகக் குடியேறி விடுவார்கள். அப்படி நடந்தால்!  இந்தியா ஒரு வறுமையான நாடாகப்போய்விடும். இரண்டாவது ….தமிழீழம் ஒரு பொருளாதார நாடாக வழர்ச்சி அடைந்தால்! தமிழக இளைஞர்கள் தமிழீழத்தின் உதவியோடு ஆயுதப் போராட்டம் அல்லது அகிம்சை  வழியூடாகப் போராடி இந்தியாவில் இருந்து தமிழகம் தனி நாடாகப் பிரியலாம்… என சந்தேகக் கண்ணோட்டத்தால் தொடர்ச்சியாக  இந்தியா ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டுள்ளது.

 இது தமிழகத்தில் வாழும் புத்திஜீவிகளிற்குத்  தெளிவாகத் தெரியும்.

அதைவிட தமிழகத்தில் வாழும் ஐம்பது வீதமான மக்களிற்கும் இது தெரியும். அதனால் தான் அவர்கள் தொடர்ந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வந்தார்கள் . ஒரு கட்டத்தில் இந்திய அரசிக்கு ஆதரவான ஒரு தமிழர் தலைவரிடம் கேட்ட கேள்வி “தமிழீழம் என்று ஒரு நாடுஅமைந்தால் இந்தியாவில் வாழும் தமிழர்கள் இங்கே வந்து நிரந்தரமாகக் குடியேற அனுமதி வழங்குவீர்களா”? பதில் ” தமிழீழம் அவர்களின் தாய் நாடு அவர்களை வர வேண்டாம்! என சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. எங்கே? வாழ வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்”. என பதில் அளித்தார் தலைவர். இப்படியான அவரின் ஒளிவுமறைவு இல்லாத தன்மையே அவர்கள் பயப்பிடக் காரணமாக இருந்திருக்கலாம் .

அடுத்து…… இந்தியா எதிர்பார்த்த விடயம்!

இலங்கையில் ஒரு உள்நாட்டுப் போர் தொடர்ந்து  நடந்து கொண்டே இருந்தால்;  கடல் மார்க்கமாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் இலங்கை செல்ல பயப்பிடுவார்கள். அவர்கள் இந்தியாவிலே தரித்து நின்று செல்வார்கள். மற்றும் உல்லாசப் பயணிகளும் இந்தியாவையே விரும்புவார்கள். அதனால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 

அதை விட உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து நடந்துகொண்டுயிருந்தால்,

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் தளம் அமைக்க விரும்ப மாட்டார்கள். அதைவிட இலங்கை ஒரு வறிய நாடாக இருந்து தொடர்ந்து இந்தியாவிடம் பிச்சை எடுக்க  வேண்டும் என இந்தியா விரும்பியது.இறுதியில் ஏன்?  இந்தியா விடுதலைப் புலிகளை அழித்தது. போராட்டம் 30 வருடம் நீண்டு கொண்டு செல்வதாலும், விடுதலைப் புலிகள் ஒரு மரபுவழி இரானணுவமாக மாறிவருவதினாலும்;  இன்னும் ஒரு 30 வருடம் நீடிக்குமானால், தமிழீழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது என்பது இந்தியாவிற்கு நன்குதெரியும். அதனால்தான் ஆயுதங்களையும், இந்திய இராணுவத்தையும்; இலங்கைக்குக் கொடுத்து 2009 விடுதலைப்புலிகளை அழிக்க இந்தியா துணை போனது. இது அனைத்துத் தமிழர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்களிடம் எவ்விதமான பலமும் இல்லையென்பதுதான் உண்மை.ஆனால் தமிழீழம் என்று ஒரு நாடுஅமைந்தால் தான் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதை அவர்கள் அறியும் நாள் வெகுதூரம் இல்லை, 

    அடுத்து இந்தியாவில் நடந்த பெண் போராளிகளிற்கான பயிற்சி முகாம் பற்றிப் பார்ப்போம்

தொடரும்

அன்புடன் ஈழமதி

Share:

1 thought on “a 822 தமிழீழக்கதை (Tamil Eelam of story) தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு”

Leave a reply to temlnews_writer Cancel reply

Your email address will not be published. Required fields are marked *